Wednesday, September 13, 2006

ஆழ்வார் குறிப்பு II - நம்மாழ்வார்

ஆழ்வார்களில் தலையானவர் / முதன்மையானவர் எனக் கருதப்படுவதால் 'நம் ஆழ்வார்' (ஸ்ரீரங்கநாதனே 'என் அடியார்' என்ற பொருளில் இவரை அன்போடு அழைக்கும் பெயரும் கூட) எனப் பெயர் பெற்ற இவர் வேளாள வம்சத்தில் அவதரித்த வைணவ வித்து! இவர் 9-ஆம் நூற்றாண்டில், திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரியில், பிரமாதி வருடத்தில், வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தில் தோன்றியவர். நம்மாழ்வார் வைகுண்டத்தின் தலைமைத் தளபதியாகக் கருதப்படும் விஸ்வக்ஷேனரின் அவதாரம் என்று கூறுவர்.

இவர் தந்தையார் பெயர் மாறன் காரி, தாய் உடைய நங்கையார் என்பவர். நம்மாழ்வாருக்கு பெற்றோர் இட்ட பெயர் மாறன் (சாதாரண மனித இயல்புகளுக்கு மாறானவன் / அப்பாற்பட்டவன் என்று பொருள் கொள்க!). இவ்வாழ்வார், சடகோபன், பராங்குசன், சடாரி, வாகுலபரணன், குருகையூர் கோன் என்றும் அறியப்படுகிறார். இதில் சடகோபன் என்ற பெயருக்குப் பின்னார் ஒரு சுவாரசியமான காரணம் உண்டு !
Photobucket - Video and Image Hosting
'சடம்' என்றால் காற்று. விரிவாக நோக்கினால், பிறக்கும் குழந்தையை 'முந்தைய ஜென்ம வினைகள்' சார்ந்த காற்று சூழும்போது அது குழந்தையின் முதல் அழுகைக்குக் காரணமாகிறது. ஆனால், நம்மாழ்வார் பிறந்ததும் அழவே இல்லையாம். அதனால் சடம் என்னும் காற்றை முறித்ததினால், அவருக்கு சடகோபன் என்ற பெயர் சூட்டப்பட்டது. அது போலவே, திருமாலின் திருவடியின் அம்சமாகக் கருதப்படுவதால், பெருமாளின் சன்னதிகளில் பக்தர்களின் தலையில் வைக்கப்படும் 'சடாரி'யாகவும் இவர் அறியப்படுகிறார். பக்தி என்கிற அங்குசத்தால் அந்த பரந்தாமனை தன் கட்டுக்குள் வைத்திருந்ததால், இவ்வாழ்வாருக்கு 'பராங்குசன்' என்ற காரணப்பெயர் உருவானது !

நம்மாழ்வார் ஓர் அசாதாரண குழந்தையாகத் திகழ்ந்தார். பிறந்த கணத்திலிருந்து குழந்தை கண்களை திறக்கவுமில்லை, எதுவும் உண்ணவுமில்லை. ஆனால், குழந்தை உடல் தேஜஸ¤டனே இருந்தது. பல நாட்கள், குழந்தை எதும் பேசாமலும் இருந்தது. மனமொடிந்து போன பெற்றோர், குருகூர் தெய்வமான ஆதி நாதர் கோயிலுக்குச் சென்று, குழந்தையை (வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு இறைவனிடம் வேண்டி) தரையில் விட்டபோது, அந்த தெய்வக் குழந்தை தவழ்ந்து சென்று கோயிலில் இருந்த புளியமரத்து பொந்தில் நுழைந்தது. அடுத்த 16 ஆண்டுகள், பத்மாசன கோலத்தில், ஆகாரமின்றி, நீரின்றி, அசைவின்றி, கண்மூடி, அந்த சூரியனே மனித உருவில் காட்சியளித்தது போல் பிரகாசத்துடன், அந்த புளியமரத்தின் அடியிலேயே நம்மாழ்வார் யோக நிலையில் வீற்றிருந்தார் !

அந்த கால கட்டத்தில், வட இந்தியாவில் இருந்த புண்ணியத் தலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மதுரகவி என்ற பண்டிதர், அயோத்தியின் தெற்கு வானத்தில் ஓர் அதி அற்புதமான ஒளியைக் கண்டார். அவ்வொளியின் மூலத்தை அறியும் விருப்பத்தில் தெற்கு நோக்கி பயணப்பட்டார். திருவரங்கத்தை அடைந்து இன்னும் சற்றே தெற்கில் உள்ள குருகூரை சென்றடைந்தபோது அப்பேரொளி புளிய மரத்தடியில் தவமிருந்த நம்மாழ்வாரின் திருமேனியில் கலந்திருப்பது மதுரகவிக்கு புலப்பட்டது!

தியானத்தில் இருந்த நம்மாழ்வரை பேச வைக்க மதுரகவி அவரை கூப்பிட்டுப் பார்த்தார், சப்தம் ஏற்படுத்திப் பார்த்தார். பலனில்லை ! தானே தண்ணொளி மிகு நிலையில் (state of enlightenment) இருந்த மதுரகவியார், நம்மாழ்வாரிடம் "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்ற கேள்வியை வீச, கண் திறந்த ஆழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார். இந்த கேள்வி பதிலுக்கான உட்பொருள் ஆழமானது. எளிமையாக விளக்க வேண்டுமென்றால், பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அந்த உடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்ப மட்டுமே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞ்ஞானத்தை உணர்வதென்பது அந்த உடம்புடன் சம்மந்தப்பட்ட குணநலன்களையும் சார்ந்தது என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் ! அதாவது, முக்தி அடைவதற்கு, ஆன்மாவுக்கு கிடைக்கும் கூடும் முக்கியமாகிறது ! ஆன்மா உய்வுற ஒரு ஜென்மமும் ஆகலாம், பல ஜென்மங்களும் ஆகலாம் ! இங்கே, உடல் 'செத்தது' ஆகவும், ஆன்மா 'சிறியது' ஆகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

நம்மாழ்வாரின் அந்த பதிலைக் கேட்ட கணத்திலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி நம்மாழ்வர் அருளிச் செய்த திவ்யப்பாசுரங்களை பதிவு செய்ததும், அவருக்கு தொண்டு புரிந்ததும், பலரும் அறிந்ததே. பிரபந்தத்தில் மதுரகவி ஆழ்வாரின் பங்கு, 'கண்ணி நுண் சிறுதாம்பு' என்ற தலைப்பில் அமைந்த 11 பாசுரங்கள் மட்டுமே. இவை தனது குருவான நம்மாழ்வாரைப் போற்றி பாடியவை. குருகூர் கோயிலில் உள்ள புளிய மரம் 'உறங்கா புளி' என்றழைக்கப்படுகிறது. இந்த புளிய மரம் பூக்கும், ஆனால் காய்க்காது, மற்ற புளிய மரத்தை போல் இரவில் மூடிக் கொள்வதில்லை.

நம்மாழ்வார் நான்கு வேதங்களின் (ரிக், யஜுர் ,சாம, அதர்வண) சாரங்களையும் முறையே, திவ்யப்பிரபந்தத்தில் வரும் திருவிருத்தம் (100), திருவாசிரியம் (7), திருவாய்மொழி(1102) மற்றும் பெரிய திருவந்தாதி(87) ஆகியவற்றில் அமைந்த திவ்யப் பாசுரங்கள் வாயிலாக அருளிச் செய்துள்ளார். திருவாய்மொழி (தெய்வப் பேச்சு) பகவத் விஷயம் என்று அழைக்கப் படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவாய்மொழிக்கு மிக உயரிய இடம் தரப்பட்டுள்ளதற்கு, இராமனுசரும், அவருக்கு பின்னால் வந்த வேதாந்த தேசிகரும், மணவாள மாமுனிகளும் காரணம் என்றால் அது மிகையில்லை. இராமானுசரின் முதன்மைச் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு ஓர் உரை எழுதியுள்ளார்.

நம்மாழ்வாரை வைணவர்கள் 'தமிழ் வேதம் தந்த ஆழ்வார்' எனப் போற்றுகின்றனர். வியாசாவதாரம் எடுத்துப் பிரம்ம சூத்திரங்களை இயற்றிய இறைவனே நம்மாழ்வாராக அவதரித்துத் அந்தப் பிரம்ம சூத்திரத்தினுடையவும், வேத வாக்கியங்களினுடையவும் அர்த்தங்களை விளக்க வேண்டி திருவாய்மொழியை அருளிச் செய்ததாக வைணவர்கள் நம்புகின்றனர். 'மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ்' என்று நாதமுனி குறிப்பிடுவதை வைத்து இவ்வாழ்வார் பாண்டிய மரபினர் என்று கூற முடியும்.

நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ள திவ்ய தேசங்கள் 37 ஆகும். இவற்றில் ஸ்ரீரங்கம், திருப்பேர்நகர், திருமாலிருஞ்சோலை, வடக்கிலுள்ள துவாரகை, திருப்பதி, திருக்குடந்தை, திருவிண்ணகர், திருக்கண்ணபுரம், தஞ்சை மாமணிக்கோயில், திருமோகூர் குறிப்பிடத்தக்கவை. பாற்கடல் வாழ் அரங்கன், 108 வைணவத் திருப்பதிகளில் கொண்ட திருக்கோலங்களோடு காட்சியளித்தது நம்மாழ்வார் ஒருவருக்கே!!! அதனால் தான் என்னவோ, இவ்வாழ்வார் திருக்குருகூர் கோயிலில் வீற்றிருந்தபடியே, அகக்கண்ணால் கண்ட காட்சிகளை வைத்து, 37 வைணவத் தலங்களைப் பற்றி திருப்பாசுரங்களை இயற்ற முடிந்தது போலும் !!!

நம்மாழ்வர் பாசுரங்களில் பக்திப் பேருவகையும் (ecstasy through devotion) ஸ்ரீவைகுண்டநாதன் மேல் அவருக்கு இருந்த கடலை ஒத்த பேரன்பும் காணப்படுகின்றன. ஒரு சமயம், நம்மாழ்வாரை அருள் பாலிக்க, மகாவிஷ்ணு அலைமகள் சமேதராய், சங்கு சக்ர தாரராய், கருடவாஹன ரூபராய் எதிர் வந்து நிற்க, 'கருமுகில் தாமரைக்காடு பூத்து நீடிரு சுடரிரு புறத்தேந்தி ஏடவீழ் திருவொடும் பொலிய ஓர் செம்பொற்குன்றின் மேல் வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றிய' பெருமாளின் திருவடி பணிந்து நம்மாழ்வார் ஆனந்தப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தார்.

பிறிதொரு சமயத்தில், நம்மாழ்வார் திருமாலை தனது பேரானந்த (அனுபூதி) நிலையில், "வேரும் வித்துமின்றித் தானே தன்னிலையறியாத் தொன் மிகு பெரு மர" என்று வியக்கிறார்! இங்கு திருமாலை மரமாக உருவகிக்கிறார். தொன் மரம் என்பதை - கால வரையறைக்கு உட்படாதது (timeless) என்றும், மிகு மரம் என்பதை வெளியின் வரையறைக்கு உட்படாதது (beyond space limitation) என்றும் பெரு மரம் என்பதை உருவ அளவுகளைக் கடந்தது (immeasurable) என்றும் கொள்ள வேண்டும் ! அதாவது பரம்பொருள் என்பது கால, வெளி அளவுகளைக் கடந்த ஒன்று என்பதைச் சொல்கிறார். தன்னை நாடி வந்தோர்க்கு, நல்லவர், தீயவர், எளியோர், பெரியோர் என்று பேதம் பாராமல் தண்ணிழலும், பழங்களும் தருவது மரத்தின் இயல்பாவது போல, மனித உயிர்கள் அனைத்தையும் அரவணைத்து பரமபதம் சேர்த்துக் கொள்வது வைகுந்தனின் குணமாகிறது.

ஆழ்வார் இப்பூமியில் 35 வருடங்களே வாழ்ந்தார். நம்மாழ்வார் திருப்பேர் நகரில் மோட்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது. திருவாய்மொழியின் இறுதியில் இவர் பாடிய பாசுரங்கள், இத்திருத்தலம் மற்றும் இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பற்றியதே. நம்மாழ்வார் 'அர்ச்சராதி கதி' வாயிலாக பரமபதம் சேரவிருப்பது திருவாய்மொழியில் சொல்லப்பட்டுள்ளது ! திருப்பேர் நகர் பெருமானாகிய அப்பக்குடத்தான் மார்க்கண்டேயருக்கு இறவா வரம் தந்ததால், இத்தலத்தில் இருக்கும் தீர்த்தம் (குளம்) மிருத்யு விநாசினி என்றழைக்கப்படுகிறது.

சாம வேதத்தின் சாரமான திருவாய்மொழியிலிருந்து சில பாசுரங்களைக் காணலாம்.

****************************
வைகுந்தா மணிவண்ணனே* என்பொல்லாத் திருக்குறளா என்னுள்மன்னி,*
வைகும் வைகல்தோறும்* அமுதாய வானேறே,*
செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து* அசுரர்க்குத் தீமைகள்-
செய்குந்தா* உன்னைநான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.


வைகுந்தன், மணிவண்ணன் என்ற நாமங்களைக் கொண்ட, குறும்புகள் பல செய்த, கோள்கள் பல சொன்ன, பொல்லாதவனே! அமுதத்தை ஒத்த வான் அரசனே! என் வாழ்வின் ஒவ்வொரு நாளும் என்னுள் நிறையவும், உன்னை சரணடைந்தவர்களின் துயர் நீக்கவும், அரக்கர்களை அழிக்கவும் உனை வேண்டினேன். உன்னிடம் வந்தடைந்த என்னை அழுத்தமாகப் (சிக்கென) பற்றிக் கொள்வாயாக!

*****************************
அடுத்து, உயரிய கருத்தைக் கொண்ட ஆழ்வாரின் இப்பாசுரத்தில், சாதி மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதை காண முடிகிறது. அதாவது, பல வழிகளிலும் பரம்பொருளை அடைய முடியும் என்ற தத்துவத்தை சொல்கிறது !

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே.


அவரவர் தாங்கள் அறிந்த வகையில், தங்கள் கடவுளர் என்று பல வகைப்பட்ட தெய்வங்கள் முன் அடி பணிந்து தொழுகின்றனர். அவரவரின் கடவுளர்களும் குறையில்லாதவர்களே. அவரவர் விதிமுறைகளின் வாயிலாக அக்கடவுளர்களிடம் சென்றடைய அவர்கள் வணங்கி நிற்கின்றனர் !

*****************************
அடுத்து, வானவியலொட்டிய ஒரு நுட்பமான விஷயத்தை, ஒரு பாசுரத்தில் சொல்லியிருக்கிறார் !

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி,அர
வூறு சுலாய்மலை தேய்க்கும் ஒலிகடல்
மாறு சுழன்று அழைக் கின்ற ஒலிஅப்பன்
சாறு படஅமு தம்கொண்ட நான்றே. 7.4.2


மேலோட்டமாக பொருள் எடுத்தால், இப்பாசுரம் திருப்பாற் கடலை அமுது கடைந்த போது உண்டான ஒலிகளைப் பற்றிப் பேசுகிறது. அதாவது பேரொலிகள், வாசுகி என்னும் பாம்பு மந்தரம் என்னும் மலையுடன் உரசும் போது உண்டானது குறித்து பேசுகிறது.

அவரது மிகப் பிரம்மாண்டமான சித்தரிப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம், நம்மாழ்வார் சாதாரண மத்து கடைதலைப் பற்றி பேசவில்லை என்பது! ஓடும் நதியை, புவியீர்ப்பு விசை¨க்கு எதிராக திருப்ப்¢ மலைகளை நோக்கி ஓட வைக்க வேண்டுமெனில் எப்பேற்பட்ட பெரும் சக்தி கொண்டவையாக அப்பேரொலிகள் இருந்திருக்க வேண்டும்! பால்வெளியானது நெளிந்து ஓடும் ஒரு ஓடையை போன்றது என்று தெளிந்திருக்கிறோம். "கடல் மாறு சுழன்று" எனும்போது திருப்பாற் கடலே மாறுபட்டு சுற்றியதாகச் சொல்கிறார். சூரிய மண்டலத்தின் சுழற்சி பற்றி அப்போதே சொல்லியிருக்கிறார். பால்வெளியின் சுழற்சி வேகத்தை தாக்குப் பிடிக்க சூரிய மண்டலம் மட்டும் விநாடிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் பால் வெளியின் உள் நோக்கிப் பாய்கிறது. நம்மாழ்வார் பேசுவது இந்த சுழற்சியைப் பற்றி!
********************************
இன்னும் சில திருவாய்மொழிப் பாசுரங்களின் பெருமை குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

நம்மாழ்வார் படத்திற்கு நன்றி: தேசிகன்

Sunday, September 10, 2006

குஷ்பு as மணியம்மை

இது குறித்து எழுத நினைத்து, நேரமின்மையால் இப்போது தான் பதிகிறேன்.

சமீபத்திய குமுதம் இதழில், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், மீண்டும் காரசாரமாக, குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்த்து பேசியிருக்கிறார் ! ஒருவர் மனைவியை, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருப்பவரை 'சிங்காரி குஷ்பு' என்று நாகரீகமாக வர்ணிப்பது தான் தமிழ் பண்பாடு போலும் ! இதற்கு முன், ஒரு பேட்டியில் (இட்லி வடை பதிவில் உள்ளது) குஷ்புவைப் பற்றி 'மும்பையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்தவர்', 'ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தவர்' என்றும், இன்ன பிறவும் கூறியவர். இவர் சம்பளம் வாங்காமல் தான் மக்கள் சேவை செய்கிறார் போலும் ! குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்த்துப் பேசுவது ஒருவரின் உரிமை தான் என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் கண்ணியம் தவறி இப்படிப் பேசுவது நிச்சயம் சரியில்லை. இப்பிரச்சினையில், அரசியல் கட்சி என்ற வகையில், பா.ம.க வின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை. டாக்டர் ராமதாஸ் இப்பிரச்சினை குறித்து கருத்து எதுவும் கூறினாரா என்றும் தெரியவில்லை.

குஷ்பு மணியம்மையாக நடித்தால் தமிழ் சமுதாயத்திற்கே கேடு என்பது போல் வேல்முருகன் பேசியிருக்கிறார் ! ஏற்கனவே, கீரன் ஒரு பின்னூட்டத்தில் 'நடிப்பு வேறு, நடிப்பவரின் தனிப்பட்ட வாழ்க்கை / கருத்து வேறு' என்று அழகாகக் கூறியிருக்கிறார். இவற்றையெல்லாம், எதிர்ப்பவர்கள் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை, எண்ணியும் பார்க்க மாட்டார்கள் ! ஏதாவது ஒரு கலாட்டா செய்வது இவர்களுக்கு வாடிக்கையாகிப் போன ஒன்று. குஷ்பு மணியம்மையாகவோ மார்கிரெட் தாட்சராகவோ நடிப்பது பற்றிய பிரச்சினையை விட, சட்டமன்ற உறுப்பினர்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினைகள் அனேகம் உள்ளன. சமூகத்தின் பல தளங்களில் ஒரு பாசிச மனப்போக்கு விரவியிருப்பதே, இது போன்றவற்றுக்கு ஆதாரம்.

குஷ்பு மணியம்மையாக நடிப்பதை தமிழ் சமுதாயமே ஏற்காது என்று கூறுபவர்களுக்கான பதில், சாதாரண பொதுமக்கள் இது குறித்து விசனப்படவும் இல்லை, போராட்டம் என்று களத்தில் குதிக்கவும் இல்லை என்பதே ! மக்கள், தங்கள் வாழ்வு குறித்த வேறு பல பிரச்சினைகளை தினம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது ! சில பத்திரிகைகள் தான் இது பற்றி வலிய எழுதியும், பேட்டி எடுத்தும் விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி குட்டையைக் குழப்புகின்றன என்றும் தோன்றுகிறது.

ஓரிரு மாதங்களுக்கு முன் தான், பெரியார் படத்திற்கு அரசு மானியம் வழங்குவது தொடர்பாக எழுந்த பிரச்சினை அலையடித்து ஓய்ந்தது. இப்போது இது ! என்னத்த சொல்ல! நடக்கும் கூத்தைப் பார்த்தால், பெரியார் உயிரோடு இருந்தால், தலையிலடித்துக் கொண்டிருப்பார் ! திரு. வேல்முருகன் தமிழ்நாட்டுப் பெண்கள் யாருமே கற்போடு இல்லை என்று குஷ்பு பேசியதாகக் (குமுதம் இதழில்) கூறியிருப்பது, exaggeration அன்றி வேறென்ன ? பிரச்சினையை லேசில் அடங்க விட மாட்டார்கள் போல் இருக்கிறது. இப்பிரச்சினையில் சீமானும், சத்யராஜும் பாராட்டப்பட வேண்டியவர்கள். குஷ்பு பாத்திரத்திற்கு ஏற்றவர் என்றும், தேர்ந்த நடிகை என்றும் வெளிப்படையாகக் கூறியிருப்பது ஆறுதலான விஷயம். திருமா ஆதரவு / எதிர்ப்பு என்று எந்த நிலையையும் எடுக்காமல் நடுநிலையாக ஏதோ பேசி விட்டுப் போய் விட்டார்.

மணியம்மையாக யார் நடிப்பது என்று தீர்மானிப்பது (அரசு மானியம் தந்திருந்தாலும் கூட !) ஞான ராஜசேகரன் என்ற சிறந்த படைப்பாளியின் கலைச் சுதந்திரம் ! அதில் தலியிட எவருக்கும் உரிமையில்லை. அவர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக பெரியார் படத்து பாத்திரப் படைப்புகளைப் பற்றியும், படமெடுப்பது குறித்தும், பலவும் சிந்தித்து அயராது செயல்பட்டு வருபவர். முக அமைப்பு, நடிப்பாற்றல் போன்றவற்றை ஆய்ந்து நடிக / நடிகையரை தேர்வு செய்து வருகிறார். இது போன்ற அனாவசியப் பிரச்சினைகள் அவரை சோர்வடைய வைத்து, படமெடுப்பதை பாதிக்கும்.

பிரச்சினைக்காக பின் வாங்காமல் தான் பெரியாரின் மனைவியாக நடித்தே தீருவேன் என்றும், மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்றும் குஷ்பு (குமுதத்தில்) பேசியிருப்பது அவரது மனவுறுதியை காட்டுகிறது. குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்ப்பதின் ஆதாரம் ஆணாதிக்க மனோபாவமின்றி வேறெதுவும் இல்லை ! பெண்ணியம் பேசுபவர்கள் / இயக்கங்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து தீவிரமாக எதிர்த்தாலொழிய இது போல் வேண்டாத பிரச்சினைகளை எழுப்புபவர்கள் ஓய மாட்டார்கள்.

எ.அ.பாலா

* 228 *

Saturday, September 09, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 11

சில SPB பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. பௌர்ணமி நேரம் இரவில் ஆடும் ஒளி தீபம் ...

2. செவி ரெண்டும் கண்ணாக ஆகும் இனி, உயிரோடு சேரும் சுருதி ...

3. உறவுறுவாள் என தானோ மனதை ....

4. தங்கப்பூவே சந்திப்போமா, சந்தித்தாலும் சிந்திப்போமா ?

5. காலம் என் பேரை பேசும்போது வாழ்வு எனது வாசல் ...

6. வாழ்ந்திடத் தான் பொறந்தாச்சு, வாசல்கள் தான் ...

7. இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம், கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே ...

8. ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம் ...

9. ஆத்தோரம் பூங்கரும்பு, காத்திருக்கும் சிறு எறும்பு, அக்கரையில்...

10. கல்லுச்சிலை போல் நீ நிற்க வேண்டும், கண்கள் பார்த்து தலை வார வேண்டும்...

11. இளமையின் கனவுகள் கண்ணோரம் துளிர்...

12. சேலை காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட...


என் நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

இடஒதுக்கீடு அமல் - 4

இத்தனை வருடங்களில், மிகச் சில அரசுப் பள்ளிகளே, தரமானவை என்று கூறத்தக்க அளவில் உள்ளன. இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் (முக்கியமாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்!) இயன்ற அளவில், அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துக் கொள்வதன் மூலம், ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சிறந்த அடிப்படைக் கல்வியை தர இயலும். மேலும், அரசும், பெரு நிறுவனங்களும் இணைந்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தனிப்பள்ளிகளே கூடத் தொடங்கலாம்.

இதனால், அம்மாணவர்கள் பிற எலீட் மாணவர்களுடன் ஒப்பீடு செய்யப்பட வேண்டிய அவசியமின்றி, நன்றாகப் படித்து, உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான திறனை, தங்கள் உழைப்பால் பெற வல்ல சாதகமான சூழலும் அமையும். தனியார் நிறுவனங்களில் வேலையில் இடஒதுக்கீடு என்பதை விட இது எவ்வளவோ மேல் என்பது என் கருத்து !!! பெண்கல்வி பின் தங்கியிருந்த காலகட்டத்தில், பெண்களுக்காகவே பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்கப்பட்டன. அதனால், நல்ல பலனும் கிட்டியது. அது போலவே, ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கென பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்குவது நிச்சயம் பலனளிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

சாதி அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகள் சமூகத்தில் நிலவுவதை மறுக்க இயலாது. அதனால் நிகழும் வன்முறையையும், அவமானங்களையும், நம் சமூகத்திலிருந்து முற்றாக விலக்க நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம் தான் ! அதே நேரத்தில், இடஒதுக்கீட்டுக்குள் இருக்கும் / இருக்க விரும்பும் எல்லா தரப்பினரும் ஒரே மாதிரியான அளவில், சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவிப்பதில்லை என்பதும் உண்மை தானே ! சமூகத்தில் எல்லா வகையிலும் பின் தங்கியுள்ள ஒரு சாராரின் முன்னேற்றத்திற்கு வேண்டி ஏற்படுத்தப்பட்ட (இடஒதுக்கீடு தரும்) ஒரு திட்டம், அரசியல் தரகர்களால், தற்போது எண்ணிக்கை விளையாட்டாய் மாறி விட்டது கொடுமை தான் ! அதாவது, சாதிகளும் இருக்கின்றன, சாதி அரசியலும் மென்மேலும் பலமடைந்து வருகிறது.

தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும்போது சாதி பேதமில்லா சமுதாயம் என்ற இலக்கு ஒரு மிக நீண்ட கனவு என்று தான் கூற வேண்டும். நம் நாட்டில் கல்வி குறித்த அனைத்து விவாதங்களும், அரசியல்வாதிகளின் சுயநலத்தால், இடஒதுக்கீடு என்ற ஒன்றை நோக்கியே பாய்வது சரியானதா ?? ஏனெனில், இடஒதுக்கீடு (மட்டுமே!) சமூக நீதிக்கு தீர்வாக அமைய முடியாது.

என்றென்றும் அன்புடன்
பாலா

பி.கு: அனானிகளும் பின்னூட்டமிடலாம் !

இடஒதுக்கீடு அமல் - 3

உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு மூன்று கட்டங்களில் நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறப்படும் நிலையில், சற்று பின்னோக்கிப் பார்ப்போம். ஐஐடிகளில் 1973-இல் (டோண்டுவை பொருத்தவரை, சமீபத்தில்!) SC / ST மாணவர்களுக்கு 22.5% இடஒதுக்கீடு அமலுக்கு வந்தபோது , JEE தேர்வில் பத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கும், Chandy கமிட்டியின் பரிந்துரைப்படி, சீட்டுக்கள் வழங்கப்பட்டன. அவர்களில் எல்லோருமே, பின் தங்கிய கிராமங்களிலிருந்து, நூலகமோ, ஆய்வுக்கூடமோ இல்லாத தரமற்ற பள்ளிகளில் படித்தவர்கள். அனைவருமே பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர் என்பதைக் கூறத் தேவையில்லை ! அம்மாணவர்களை (அடுத்த ஆண்டுக்கான) முதலாண்டு பொறியியற் கல்விக்கு தயார்படுத்த வேண்டி, ஒரு வருட தனிப்பயிற்சி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஒரு வருடத்திலேயே அம்மாணவர்களில் பலர் வெளியேறி விட்டனர். மிச்சமிருந்தவர், ஐஐடிகளில் அனுமதிக்கப்பட்டு, படாத பாடு பட்டனர். இறுதியில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகச்சிலரே பட்டப் படிப்பை முடித்தனர் !

மேற்கூறியதை வைத்துப் பார்க்கும்போது, இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதோடு அரசின் கடமை முடிந்து விடுகிறதா என்ற கேள்வி எழுகிறது ! இது போல கல்லூரி படிப்பை முடிக்காமல் வெளியேறும் தலித் மாணவர்களை அரசு துளியும் கண்டு கொள்வதில்லை. மேலும், ஐஐடிகளிலும் இன்னும் சில கல்லூரிகளிலும், விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய சூழலில், அரசு அப்போது நிர்ணயித்திருந்த (இலவச வசதி பெறுவதற்கான) வருவாய் வரம்பு மிகக் குறைவானதாக இருந்ததால், மிகச்சிலரே இலவசக் கல்விக்கு தகுதி பெற்றவராய் இருந்தனர் ! மற்ற மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு என்பது அவர்கள் வாழ்வில், எல்லா வகையிலும் பெரும் போராட்டம் தான் ! இச்சூழலில், ஒரு தலித் மாணவர் கூட, இதுவரை பொதுப்பிரிவில், சீட் பெறவில்லை என்பது தான் சுடும் உண்மை !!! அதாவது, பொதுப்பிரிவிலுள்ள சீட்டுகளை ஒதுக்கப்பட்டவர் எடுத்துக் கொள்கின்றனர் என்று பொத்தாம் பொதுவாகக் கூறுவது சரியில்லை.

சீட்டுகளின் எண்ணிக்கையை (பொதுப்பிரிவு பாதிக்காத வகையில்!) உயர்த்துவதோ, ஆசிரியர்களின் சம்பளத்தை / ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதோ இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பது நிதர்சனம். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நுழைபவர்களின் (அறிவியல், கணிதம் போன்றவற்றில்) அடிப்படை அறிவு பலமாக இருத்தல் அவசியம். அதனாலேயே, எட்டாவது வகுப்பிலிருந்தே, பின் தங்கிய கிராமப்புறச் சூழலிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி தருவதும் அவசியமாகிறது.

"கல்வி ஓர் அடிப்படை உரிமை" என்பதை உணரவே, சுதந்திரத்திற்குப் பின், நமக்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்படியும், எந்த அரசும், இதற்காக, உருப்படியாக எதையும் செய்ய முன் வரவில்லை. அடிப்படைக் கல்வியின் (Primary/Secondary education) தரத்தை மேம்படுத்த பைசா செலவழிக்க விரும்பாத அரசு, மாறாக, "உயர்" கல்விக்காக (சீட்டுகளை அதிகப்படுத்துவதன் தொடர்ச்சியாக!) ஆயிரமாயிரம் கோடிகளை இறைக்க தயாராக உள்ளது பெரிய கேலிக் கூத்து ! இந்த அணுகுமுறை சரியானதா / பலன் தருமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாய் தொக்கி நிற்கிறது ?

படிக்க விரும்பும் எல்லாருக்கும் கல்வி வாய்ப்பு அளிக்க வல்ல சூழலை அரசால், மிக நிச்சயமாக உருவாக்க இயலும். ஆனால், அதற்கு, அரசு தன் வருவாயை (பணக்காரர்களுக்கு சலுகைகள் வழங்குவதையும், பெரு நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிப்பதையும் நிறுத்திக் கொண்டு) பெருக்கிக் கொள்வதும் அவசியமாகிறது !

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, September 07, 2006

கௌசல்யாவின் கல்விக்கு உதவி வேண்டி - 2

நண்பர்களே,

நான் எனது பதிவில் விடுத்த வேண்டுகோளின் தொடர்ச்சியாக, உங்களில் பலர் உதவ முன் வந்து, எனக்கு தனிமடல் அனுப்பியதற்கு முதற்கண் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தனிமடல் அனுப்பிய அனைவருக்கும் பணம் அனுப்புவதற்கான விவரங்களை (வங்கிக் கணக்கு / என் முகவரி ...) தெரிவித்துள்ளேன்.

நிதியுதவி அனுப்புவது தொடர்பாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள்:

உள்நாட்டிலிருந்தோ / அயல்நாட்டிலிருந்தோ எனது அல்லது ராம்கியின் வங்கிக் கணக்குக்கு Direct transfer மூலம் பணம் அனுப்புபவர்கள், தயவு செய்து, பணமாற்றம் செய்யும்போது, உங்கள் பெயர் transaction-இல் தெளிவாக தெரியுமாறு பார்த்துக் கொள்ளவும். அத்துடன், எங்களுக்கு மின்மடல் வாயிலாக, பணமாற்று விவரங்களை, அதாவது, அனுப்பியவர் பெயர், தொகை, அனுப்பிய தேதி, பணமாற்று எண் (transaction reference number) எங்களுக்கு மறக்காமல் தெரியப்படுத்தவும். தொகை எங்கள் வங்கிக் கணக்குக்கு வந்தவுடன், உடனே உங்களுக்கு மடலிடுகிறேன். இதன் மூலம் குழப்பங்களைத் தவிர்க்க இயலும்.

அது போலவே, என் முகவரிக்கு செக் அல்லது DD அனுப்புபவர்களும், அனுப்பிய கையோடு எங்களுக்கு விவரங்களை தனிமடலில் அறியத் தரவும்.

நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, September 06, 2006

திவ்ய தேசம் - 2 திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்)

************************
இவ்வைணவ திவ்ய தேசம், உத்தமர் கோயில் (அல்லது பிட்சாண்டர் கோயில்) என்ற கிராமத்தில், திருச்சிக்கும் விழுப்புரத்துக்கும் இடையே உள்ள ரயில் பாதையில் அமைந்துள்ளது. திருவரங்கத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது.

புருஷோத்தமன் என்றறியப்படும் இக்கோயிலின் மூலவர், கிழக்கு நோக்கி புஜங்க (பாம்பின் மேல்) சயனத்தில் காட்சியளித்து அருள் பாலிக்கிறார். மஹாவிஷ்ணு, புஜங்க சயனத்தில் 20 திவ்ய தேசங்களில் காட்சி அளிக்கிறார். தாயார் பூர்வதேவி மற்றும் பூர்ணவல்லி என்று அழைக்கப்படுகிறார். வாழை மரத்தை இத்திருத்தலத்தின் தலவிருட்சம் எனப்படுகிறது. இந்த திருக்கோயிலுக்கு நேபஷேத்திரம் மற்றும் ஆதிமபுரம் என்ற பெயர்களும் உண்டு. இங்குள்ள விமானமும், தீர்த்தமும் (குளம்) உத்யோக விமானம் மற்றும் கத(ர)ம்ப தீர்த்தம் எனப்படுகின்றன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியின் ஆறாம் திருமொழி - கைம்மானத்தில் காணப்படும் பாசுரத்தில் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். அப்பாசுரம் இதோ:

Photobucket - Video and Image Hosting

1399@..
பேரானைக்* குறுங்குடி எம்பெருமானை*திருதண்கால்
ஊரானைக்* கரம்பனூர் உத்தமனை*முத்திலங்கு
காரார் திண்கடலேழும்* மலையேழ் இவ்வுலகேழுண்டும்*
ஆராதென்றிருந்தானைக்* கண்டது தென்னரங்கத்தே (5.6.2)



இக்கோயிலின் விசேஷம், மும்மூர்த்திகள் எனப்படும் சிவனுன், விஷ்ணுவும், பிரம்மனும் ஒரே இடத்தில் தங்கள் துணைவியருடன் எழுந்தருளியிருப்பது தான் ! அதனாலேயே, இக்கோயில் கதம்ப ஷேத்திரம் எனப்படுகிறது. இங்கு கிடைக்கும், (அரிதாகக் காணப்படும்) நாகலிங்கப்பூ கோயில் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. விஷ்ணு, மகாலஷ்மி தவிர, சிவன், பார்வதி (வடிவுடையம்மன்), பிரம்மா, சரஸ்வதி ஆகியோருக்கு தனி சன்னதிகள் இங்கு உள்ளன. மேலும், ஆண்டாள், வரதராஜர், வேணுகோபாலன், ராமர், விநாயகர், நடராஜர், சுப்ரமணியர், சனீஸ்வரர் மற்றும் ஆஞ்சநேயருக்கு இக்கோயிலில் சன்னதிகள் இருக்கின்றன.

பரமசிவன் குடும்பத்தோடு, பிட்சாதன மூர்த்தியாக இங்கு காட்சியளிப்பது, விசேஷமாகக் கருதப்படுகிறது. திருவரங்கம் கோயில் ஒரு முறை புதுப்பிக்கப்பட்டபோது, திருமங்கையாழ்வார் இங்கு தங்கியிருந்து தான் திருப்பணிகளை பார்வையிட்டார். பாண்டிய மற்றும் சோழ காலத்து கல்வெட்டுகளை இக்கோயிலில் காணலாம்.

ஒரு முறை, கோபத்தில் சிவன் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுத்தபோது, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதாகவும், மகாலஷ்மியிடம் பிட்சை பெற்றதன் மூலம், சிவனுக்கு விமோசனம் கிடைத்ததாகவும் தலபுராணம் கூறுகிறது. மற்றொரு பழங்கதை, மகாவிஷ்ணு இவ்விடத்தில் கதம்ப மர வடிவில் நின்றதாகவும், பிரம்மன் அவரை வழிபட்டதாகவும், பிரம்மனின் கமண்டல நீர் கதம்ப ஆறு என்ற பெயரில் ஓடியதாகவும், பின்னாளில் காதம்ப முனி இங்கு விஷ்ணுவை வழிபட்டதாகவும் கூறுகிறது.

புருஷோத்தமப் பெருமானின் பிரம்ம உத்சவம் சித்திரை மாதத்திலும், சிவபெருமானுக்கான உத்சவம் வைகாசி மாதத்திலும் நடைபெறுகின்றன. மாசி மாத உத்சவ சமயம், ஸ்ரீரங்கத்தின் உத்சவ மூர்த்தி கதம்ப தீர்த்தத்தில் எழுந்தருள்கிறார்.
***************************
என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, September 04, 2006

கௌசல்யாவின் கல்விக்கு உதவி வேண்டி

அன்பான வலைப்பதிவு நண்பர்களே,

இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!!

சென்ற வருடம், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தன் பட்டப்படிப்பைத் தொடங்கிய கௌசல்யா என்ற ஏழை மாணவியின் கல்விக்கு உதவும் நோக்கத்துடன், என் பதிவு பிரமிக்க வைக்கும் கௌசல்யா வாயிலாக நான் வெளியிட்ட வேண்டுகோளின் தொடர்ச்சியாக, பல வலையுலக நண்பர்கள் பண உதவி செய்தனர். கிட்டத்தட்ட 30000-க்கும் மேலாக பணம் திரட்ட முடிந்தது.

கௌசல்யாவை சந்தித்துப் பேசுவதற்கும், அவருக்காக திரட்டிய தொகையை அவரிடம் வழங்குவதற்கும், கௌசல்யாவைப் பற்றி முதலில் செய்தி வெளியிட்டிருந்த டெக்கான் குரோனிகளின் செய்தி சேகரிப்புத் துறையின் தலைவர் திரு.பகவன் சிங் ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பு பற்றிய என் பதிவு இது: 'சென்னைப் பெருமழையும் நெகிழ்ச்சியானதொரு சந்திப்பும்'.

அப்பதிவிலேயே, கௌசல்யாவின் மருத்துவப் படிப்பு முடியும் வரை, அவருடைய கல்விக்கு, நம்மால் இயன்ற உதவியை செய்வது குறித்து கோடிட்டு இருந்தேன். அதனால், நம் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக, மீண்டும் ஓர் உதவித்தொகையை திரட்டி, இம்மாணவியின் படிப்புச் செலவுக்கு தொடந்து வழங்கலாம் என்ற எண்ணத்துடன், பண உதவிக்கான இந்த வேண்டுகோளை, உங்கள் முன் மீண்டும் வைக்கிறேன். உங்களால் இயன்ற தொகையை (அது சிறியதாக இருந்தாலும்) உதவியாக அளிக்குமாறு உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கல்விக்கான "பொது உதவி" நிதியாகவும் உங்களால் இயன்றதை வழங்கலாம்.

முதலில் கௌசல்யாவிடம், அவரது முதல் வருட மருத்துவப் படிப்பு குறித்தும், உடனடியாக சமாளிக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றியும் பேச இருக்கிறேன். கணிசமான ஒரு தொகை திரண்டவுடன், பகவன் சிங் அவர்கள் மூலம் கௌசல்யாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, உதவிக் தொகையை (அவருக்கு சரியான வகையில் பயனளிக்கும் விதமாக) சேர்ப்பிப்பதற்கு நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்.

சென்ற வருடம், பணம் தந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும், இவ்விஷயத்தில் உறுதுணையாக இருந்த அருமை நண்பன் 'ரஜினி' ராம்கிக்கும், திரு.டோண்டு ராகவனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !!!

உதவிய நண்பர்கள் விவரம்:
'கடலோடி' பரணீ, ரம்யா நாகேஷ்வரன், ஜெயஸ்ரீ(US), முகமூடி, துளசி, சொ.சங்கரபாண்டி, திருமலை, சலாவுதின் பஷீர், 'டோண்டு' ராகவன், குழலி, ஈஸ்வர பிரசாத், மோகன் அண்ணாமலை, 'ரஜினி' ராம்கி, 'அரட்டை அரங்கம்' வீ.எம் மற்றும் பெயர் வெளியிட விரும்பாத ஓர் அன்பர்.


அனைத்து நண்பர்களுக்கும்:
****************************************
பண உதவி செய்ய விரும்பும், இந்தியாவிலிருக்கும் நண்பர்கள் / வெளிநாட்டிலிருந்து (ரூபாய்) காசோலையாக (அ) என் வங்கிக் கணக்குக்கு Direct credit செய்து உதவ விரும்பும் அன்பர்கள், தயவு செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு எழுதவும்.

balaji_ammu@yahoo.com
ramki@rajinifans.com
balaji.ammu@gmail.com
rajni_ramki@yahoo.com

இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டாலே போதும். நான் / ராம்கி உங்களுக்கு பணம் அனுப்புவதற்கான விவரங்களை (வங்கி சம்மந்தப்பட்ட மற்றும் எங்கள் முகவரி) தெளிவாக உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

**********************************

என்றென்றும் அன்புடன்,
பாலா

Saturday, September 02, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 10

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

**************************



1. தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த் தென்றல் என்னைத் தொடலாம்

2. கலையாத மோகனச் சுவை நான் ...

3. மகிழ்வார், சுகம் பெறுவார், அதிசயம் காண்பார்

4. புன்னகை வீசி ஆறுதல் கூற அருகில் ....

5. இச்சைக் கிளியாய் மாறுவேன், என்றும் உன்னை நாடுவேன்

6. அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்

7. மை வடித்த கண்ணில் பெண் பொய் வடித்ததென்ன

8. மனக்கோயில் வாழ வந்த தெய்வீகப் பெண் என்பதோ

9. திக்கி திக்கிப் பேசுவது குயில் போலே

10. பாடும் உள்ளம் துள்ளத் துள்ள பாடல் ஒன்று ...

11. விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள் புரியாதோ ...

12. முடியும்போது தொடங்கும், நீ தொடங்கும்போது முடியும்


*******************************

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

ஆழ்வார் குறிப்பு I - திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார், பிறவாது பிறந்த தெய்வக் குழந்தையாய், உறையூரில் (திருக்கோழியில்) கார்த்திகை மாதத்தில், ரோகினி நட்சத்திரத்தில் ஸ்ரீவத்ஸ அம்சத்தில் (நாராயணனின் திருமார்பில் உள்ள மச்சக்குறி) 8-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். இவரது பெற்றோர், பணி குறித்து தகவல் எதுவும் இவரது வாழ்வுக் குறிப்பில் இல்லை. இவ்வாழ்வாருக்கு முனிவாகனர், யோகிவாகனர், கவீஸ்வரர் என்ற திருநாமங்களும் உண்டு.
Photobucket - Video and Image Hosting
குழந்தைப் பேறு இல்லாத பாணர் குலத்தவர் ஒருவரால் அன்போடு பேணி வளர்க்கப் பட்டவர். அவர் புகுந்த குலத்தில் பிரசத்தி பெற்ற யாழ் இசையில் சிறு வயதிலேயே மிகுந்த தேர்ச்சி பெற்றதனால், 'பாணர்' என்றே அழைக்கப்பட்டார். அவர் யாழைத் தொட்டபோதெல்லாம், அதிலிருந்து கேட்டவர் மனதை உருக்கும் இசை வெளிப்பட்டது !

ஸ்ரீரங்கத்துப் பெருமானின் மீது அளவிலா பக்தியின் வெளிப்பாடாக, இரவும் பகலும், காவிரிக் கரையில் நின்று, யாழை மீட்டி, கோபுரத்தை பார்த்தபடி (அவர் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சார்ந்தவர் என்று கூறி உயர்சாதியினர் கோயிலுக்குள் அவரை அனுமதிக்காத காரணத்தால்) இனிமையாகப் பாடுவதை செய்து வந்தார். காவிரிக் கரையின் மணற்குன்றுகளில் உறங்குவார். அவருக்கு ஸ்ரீரங்கநாதரைத் தவிர உறவினர் யாரும் கிடையாது !!! உயர் குலத்தவர் (என்று தங்களை எண்ணிக் கொண்டவர்!) அவர் ஸ்ரீரங்கத்து தெருக்களில் கூட, தான் வருவதை முன் கூட்டியே அறிவித்த பின் தான், உலவலாம் என்று கட்டளையிட்டிருந்தனர் !

திருப்பாணாழ்வார் முக்தியடைந்தது குறித்து சுவையான நிகழ்வு ஒன்று பண்டைய குறிப்புகளில் சொல்லப்படுள்ளது !

ஒரு சமயம், அவர் காவிரியின் தென்கரையில் நின்றபடி, அரங்கநாதரே பேருவகை கொள்ளும் வண்ணம், அற்புதமாக பல நாட்கள் பாடிக் கொண்டு இருந்தார். அங்கு வந்த, ஸ்ரீரங்கத்தில் இறைசேவை செய்து வந்த லோகசாரங்கமுனி என்ற அந்தணர், அவரை எட்டிச் செல்லுமாறு பலமுறை பணித்தார், அரங்கனின் பக்தியில் திளைத்து, மோன நிலையில் நின்ற ஆழ்வார் அதைப் பொருட்படுத்தவில்லை.

சினமுற்ற லோகசாரங்கர், பாணர் மீது கல்லெறிய, அது ஆழ்வாரின் நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டது. கண் விழித்த ஆழ்வார், தன் செய்கைக்கு லோகசாரங்கரே வெட்கும் அளவில், மன்னிப்பு கேட்டு, அவ்விடத்தை விட்டு அகன்றார். லோகசாரங்கரின் இச்செய்கையால், திருவுள்ளம் கலங்கிய, கோயிலில் எழிந்தருளிய ஸ்ரீரங்கப் பெருமானின் திருநெற்றியில் குருதி பெருக்குற்றதைக் கண்டு, லோகசாரங்கர் துணுக்குற்றார். இரவில் தூக்கமின்றித் தவித்தார்.

அவரது கனவில் தோன்றிய அரங்கன், ஆழ்வார் தன்னை தரிசிக்க வந்தாலொழிய, தனது கோயில் கதவுகள் திறக்கப்பட மாட்டாது என்றும், ஆழ்வாரை எப்பாடு பட்டாவது தன் முன் கூட்டி வருவது தான் லோகசாரங்கர் செய்த பெரும்பாவத்துக்கு பிராயசித்தம் என்றும் கூறி மறைந்தார். முற்றும் மனம் திருந்திய லோகசாரங்கமுனி காவிரிக்கரைக்கு ஓடி, கோயிலுக்கு வருமாறு பாணரிடம் மன்றாடிக் கேட்டார். பாணரோ கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க மறுக்க, மிகுந்த நிர்பந்தத்தின் முடிவில், லோகசாரங்கமுனி ஆழ்வாரை தன் தோளில் சுமந்து கோயிலுக்குக் கூட்டி வந்தார். இதனால் தான், இவர் 'முனிவாகனர்' என்றும் அறியப்படுகிறார்.

திருமாமணி மண்டபத்தில் வீற்றிருந்த அரங்கநாதப் பெருமான் முன் வந்திறங்கிய திருப்பாணாழ்வார், அரங்கனை தரிசித்த திவ்ய அனுபவம் தந்த பேருவகையில், திருவாய் மலர்ந்தருளிய 'அமலனாதி பிரான்' பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது!!! இந்த பத்து பாசுரங்களில் அரங்கனை, திருப்பாதத்தில் தொடங்கி திருக்கிரீடம் வரை, மிக மிக அழகாக பக்திப் பெருக்கோடு வர்ணித்திருக்கிறார். "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று அமலனாதிபிரானை நிறைவு செய்த திருப்பாணாழ்வார், அரங்கனின் அடி பற்றி அக்கணமே திருவரங்கப் பெருமானுடன் ஒன்றறக் கலந்தார் !!!

அமலனாதிபிரான் உங்கள் வாசிப்புக்கு:

927@..
அமலன் ஆதிபிரான் * அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,*
நிமலன் நின்மலன் நீதி வானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், *திருக்-
கமல பாதம் வந்து
* என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே. (2) (1)

928@
உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டமுற,*
நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் *கடியார்பொழில் அரங்கத் தம்மான்,*
அரைச்சிவந்த ஆடையின் மேல் *சென்றதாம் என் சிந்தனையே. (2)

929@..
மந்தி பாய்* வட வேங்கட மாமலை,* வானவர்கள்,-
சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்,*
அந்தி போல் நிறத்து ஆடையும் *அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்*
உந்தி மேலதன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே. (2) (3)

930@
சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர வோட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட* மாமயில் ஆடரங்கத்து அம்மான்,*திருவயிற்று-
உதர பந்தம்*
என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே. (4)

931@
பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ*
அடியேனை ஆட்கொண்டதே. (5)

932@
துண்ட வெண்பிறையான்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால்வரை, *முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர்
*அடியேனை உய்யக்கொண்டதே. (6)

933@
கையினார் *சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார் *துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார்,* அணியரங்கனார் *அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ.* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (7)

934@
பரியனாகி வந்த* அவுணன் உடல்கீண்ட,* அமரர்க்கு-
அரிய ஆதிபிரான்* அரங்கத்து அமலன் முகத்து,*
கரியவாகிப் புடைபரந்து* மிளிர்ந்து செவ்வரியோடி,* நீண்டவப்-
பெரிய வாய கண்கள்*
என்னைப் பேதைமை செய்தனவே. (8)

935@..
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ.
* நிறை கொண்டது என் நெஞ்சினையே. (2) (9)

936@..
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே
. (2) (10)

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, September 01, 2006

SPB பாடிய தாலாட்டு !

பாடல்: இது குழந்தை பாடும் தாலாட்டு

படம்: ஒருதலை ராகம்

பாடியவர்: பாலசுப்பிரமணியம்

பாடலாசிரியர்: T ராஜேந்தர்


இப்படத்தை அண்ணாசாலை அலங்கார் திரையரங்கில் பார்த்ததாக நினைவு ! படத்தில் டூயட் பாடல்கள் கிடையாது, எல்லாமே ஆண் மட்டுமே பாடும் பாடல்கள். அலங்கார் இப்போது இல்லை !

ஒருதலைக் காதலை, அழகான இசையுடன் கூடிய எளிமையான பாடல் வரிகளில், வெளிப்படுத்தியிருப்பது அருமை. வீணையை ஒரு திரைப்பாடலில் இவ்வளவு நேர்த்தியாக கையாண்டிருப்பது கூடுதல் அருமை !

இப்பாடலை எப்போதும் கேட்டாலும் சுகானுபவம் தான். இதில் 'உறவுறுவாள்', 'உறவுறாத' என்ற சொற்கள் அழகாக எடுத்தாளப்பட்டுள்ளன என்பது என் கருத்து. பாடல் வரிகள் கீழே:

இது குழந்தை பாடும் தாலாட்டு..!
இது இரவு நேர பூபாளம்..!
இது மேற்கில் தோன்றும் உதயம்..!
இது நதியில்லாத ஓடம்..!

(இது குழந்தை பாடும்..)

நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தைப் பார்க்கிறேன்..
வடமிழந்த தேரது ஒன்றை
நாள் தோறும் இழுக்கிறேன்..

சிறகிழந்த பறவை ஒன்றை
வானத்தில் பார்க்கிறேன்...
உறவுறாத பெண்ணை எண்ணி
நாளெல்லாம் வாழ்கிறேன்...

(இது குழந்தை பாடும்..)

வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்..
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்..

விடிந்துவிட்ட பொழுதில் கூட
விண் மீனைப் பார்க்கிறேன்...
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்..

(இது குழந்தை பாடும்..)

உளமறிந்த பின் தானோ
அவளை நான் நினைத்தது..!
உறவுறுவாள் என தானோ
மனதை நான் கொடுத்தது..!

உயிரிழந்த கருவைக் கொண்டு
கவிதை நான் வடிப்பது..
ஒரு தலையாய் காதலிலே
எத்தனை நாள் வாழ்வது..!

(இது குழந்தை பாடும்..)


என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, August 31, 2006

செ.அரங்கரின் தமாஷ் பேட்டி !

அ.தி.மு.க விலிருந்து சமீபத்தில் வெளியேறி இருக்கும் முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் ஜூ.வி க்கு பேட்டி அளித்துள்ளார்.

1. கட்சியை விட்டு வந்தீர்கள் சரி... மதம், ஆன்மிகம் என்று சொல்லி திராவிட இயக்கத்தின் அடிப்படையையே சந்தேகப்பட வைத்திருக்கிறீர்களே ...?

பதில்: சந்தேகமும் இல்லை. குழப்பமும் இல்லை. இந்தப் பத்தாண்டுகளில் எனக்குப் பல நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில விஷயங்களை, பிரச்சினைகளை ஆழமாகக் கவனித்தால், மதத்தின் அவசியமும், ஆன்மிகத்தின் அற்புதமும் புரிகிறது (இப்போதாவது புரிந்து கொண்டாரே !!!!)

பெரியாரே நாத்திகர் அல்ல என்பது என் கருத்து.
(வாசிக்கிற நீங்களெல்லாம் இப்ப நமுட்டுச் சிரிப்பு சிரிக்கணும், OK யா ;-))

அவர் முழு நாத்திகராக இருந்தால், முகமது நபியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டிருக்க மாட்டார். அரிஜன மக்களை கோயிலுக்குள் நுழைய அனுமதி கோரிப் போராடி இருக்கவும் மாட்டார்.
(வாசிக்கிற நீங்களெல்லாம் இப்ப சத்தமா சிரிக்கணும், OK யா ;-)) இட்லிவடை மாதிரி, உங்களையெல்லாம் சிரிக்கக்கூடாதுன்னு நான் சொல்லவே மாட்டேன் :)))

ஜாதி ரீதியாக உயர்வு தாழ்வு சொல்லி கோயில்களை நிர்வகித்ததைத் தான் அவர் எதிர்த்தார்
(இது எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம் தானே !)

2. அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள், ஆன்மிகமா, அரசியலா ?

பதில்: ஆன்மிகத்தின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவேன். அரசியலிலும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது (?!).
(இதைப் படிக்கிற நீங்களெல்லாம் இப்ப அழ ஆரம்பிக்கணும், OK வா ;-))

ஆனால், எங்கிருந்து அதைச் செய்வது என்று முடிவு செய்யவில்லை
(இதைப் படிக்கிற நீங்களெல்லாம் இப்ப பேய் முழி பெருமுழி முழிக்கணும், OK வா ;-))

பேட்டி இனிதே முடிவடைந்தது :)

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: ஜுனியர் விகடன்

Tuesday, August 29, 2006

திவ்ய தேச தரிசனம் 1 - திருக்கோழி (உறையூர்)

மஹாவிஷ்ணுவுக்கு உலகெங்கும் பல கோயில்கள் இருந்தாலும், திராவிட வேதம் என்றழைக்கப்படுகிற, பக்தி ரஸம் சொட்டும் ஆழ்வார் பாசுரங்களின் தொகுப்பான, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற (மங்களா சாசனம் செய்யப்பட்ட) திவ்ய தேசங்கள் எனப்படும் திருக்கோயில்கள் மொத்தம் 108 ஆகும். இவற்றில் 105 கோயில்கள், இந்திய துணைக்கண்டத்திலும், 1 (சாளக்கிராமம்) நேபாளத்திலும் உள்ளன. மற்ற இரண்டும் விஷ்ணுவின் விண்ணுலக உறைவிடங்களாக உருவகப்படுத்தப்பட்ட பரமபதமும் (வைகுந்தம்), திருப்பாற்கடலும் என்பது வைணவர்களின் நம்பிக்கை.

இவை வைணவத் திருப்பதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பூவுலகில் உள்ள 106 புனிதத்தலங்களில், 40 முந்தைய சோழ நாட்டிலும், 2 நடு நாட்டிலும் (கடலூர் அருகில்), 22 தொண்டை நாட்டிலும், 11 வட நாட்டிலும் (ஆந்திரா, உ.பி, குஜராத், நேபாளம்), 13 மலை நாட்டிலும் (கேரளம்), 18 பாண்டி நாட்டிலும் அமைந்துள்ளன. திவ்ய தேசங்கள் சிலவற்றில்(60) நின்ற திருக்கோலத்தோடும், சிலவற்றில்(27) கிடந்த திருக்கோலத்தோடும், சிலவற்றில்(21) வீற்றிருந்த திருக்கோலத்தோடும் மஹாவிஷ்ணு காட்சி தருகிறார்.

ஆழ்வார் என்ற சொல் 'இறையனுபவத்தில் திளைப்பவர்' என்பதை குறிக்கும். வைணவத்தில் பன்னிருவர், ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 5 முதல் 9-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இவர்கள் தென்னிந்தியாவின் பல இடங்களுக்கு தொடர்ந்து பயணித்தும், இறையன்பைத் தேக்கிய மிக அழகான, தத்துவார்த்தமான பாசுரங்களை இயற்றியும், பக்தி மார்கத்தை செம்மைபடுத்தி, மதச்சூழல் புதுப்பொலிவு பெறுவதற்கு காரணமாயினர் என்றால் அது மிகையில்லை. மிக முக்கியமாக, ஆழ்வார் பாசுரங்களில் சொல்லப்பட்டவை சாதி, இன வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவை, வைகுந்தன் மேல் ஒருவித அதிதீவிர அன்பையும் பூரண சரணாகதி தத்துவத்தையும் பறைசாற்றுபவை ! ஆழ்ந்த உணர்வுபூர்வமான இறையன்பை மட்டுமே முன் நிறுத்திய புது மதப்பாரம்பரியத்தை நிறுவியதில் ஆழ்வார்களே தலையானவர்கள் எனலாம். பல காலகட்டங்களில் வாழ்ந்த ஆழ்வார்களின் பாடல்களை தேடி எடுத்து அதை நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்ற தொகுப்பாக்கி, இசைப்படுத்திய பெருமை நாதமுனி என்ற பெருமகனாரைச் சாரும். இதற்காக, தன் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டவர் அவர் !

சோழ நாட்டில் அமைந்துள்ள வைணவ திவ்ய தேசங்களை குறித்து ஒரு தொடர் எழுதலாம் என்று எண்ணம். தொடரின் முதல் பதிவு இது. முதன்மையான திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். தேசிகனும் பல சமயங்களில் ஸ்ரீரங்கம் குறித்து தன் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். எனவே, திருக்கோழி என்ற திருவுறையூர் கோயில் பற்றிய பதிவோடு இத்தொடரை ஆரம்பிக்கிறேன்.


*****************************
இக்கோயில், திருச்சியிலிருந்து மூன்று கிமீ தொலைவில் உள்ளது. இத்தலம், நிஷ¤லபுரி, ஊர்சடை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் நாயகர் அழகிய மணவாளன் எனப்படுகிறார், நின்ற திருக்கோலத்தில், கைகளில் சங்கு/ பிரயோக சக்கரம் தாங்கி அருள் பாலிக்கிறார். வீற்றிருந்த திருக்கோலத்தில் உள்ள தாயார், கமலவல்லி நாச்சியார் மற்றும் வாசவல்லி என்று அறியப்படுகிறார். திருமங்கையாழ்வாரும் (பாசுரம் 1762), குலசேகர ஆழ்வாரும் (பாசுரம் 662) இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். இங்குள்ள விமானமும், தீர்த்தமும் (குளம்) கல்யாண விமானம் மற்றும் கல்யாண தீர்த்தம் எனப்படுகின்றன. திருப்பாணாழ்வார் இங்கு தான் அவதரித்தார். அரங்கனை தரிசித்த திவ்ய அனுபவம் தந்த பேருவகையில், அவர் திருவாய் மலர்ந்தருளிய 'அமலனாதி பிரான்' பாசுரங்களுக்கு ஈடு இணை கிடையாது !
*****************************

அமலனாதிபிரானில் வரும் 3 அற்புதமான பாசுரங்களை கீழே தந்திருக்கிறேன். அரங்கனின் பேரெழில் அவர் உள்ளத்தை நிறைத்ததையும், அரங்கன் அவருள் புகுந்து அவரை ஆட்கொண்டதையும், அமுதை ஒத்த அரங்கனைக் கண்டபின் வேறெதையும் காணும் ஆசை அவரை விட்டு அகன்று விட்டதையும் ஆனந்தப் பெருக்கோடு சொல்லியிருக்கிறார்!

931@
பாரமாய* பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-

வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*

கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-

வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே.

பதவுரை:
என்னுடைய முற்பிறவியின் பந்தங்களை நீக்கி, என்னை ஏற்றுக்கொண்டதோடு, என்னையும் ஆட்கொண்டவனும் ஆகிய திருவரங்கத்தில் வாழும் எம்பெருமானே! உன் திருமார்பில் அடியவனை சேர்த்துக் கொண்டதற்கு, என்ன பெருந்தவம் செய்தேன் என்று நான் அறியேன்!

935@..
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*

ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*

கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*

நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே.


பதவுரை:
ஆலிலைக் கண்ணனாய், சிறுவனாய், ஏழு உலகங்களையும் விழுங்கியவனும், சர்ப்பத்தில் பள்ளி கொண்டிருப்பவனும் பெரிய மணிகளால் ஆன ஆரமும், முத்து மாலையும் தன் நீலமேனியில் அணிந்தவனும் ஆகிய அரங்கநாதனின் ஒப்பற்ற/முடிவற்ற பேரழகு என் உள்ளத்தை முழுதும் வசப்படுத்தி விட்டதே!

936@..
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-

உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*

அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-

கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே.


பதவுரை:
கொண்டல் பூக்களின் நிறத்தை உடையவனும், ஆயர்பாடியில் வெண்ணெயை திருடி உண்டவனும், அண்டசராசரத்திற்கு அதிபதியும் ஆன அமுதத்தை ஒத்த அரங்கநாதனை தரிசித்த எனது கண்கள் வேறெதையும் காண விரும்பாதே!


***************************
இக்கோயிலின் (திருக்கோழி அல்லது மூக்கேஸ்வரம்) பெயர்க் காரணம் , ஒரு தைரியமான கோழி வலிமை பொருந்திய ஒரு யானையை தன் அலகால் கொத்தி விரட்டியடித்ததாகக் கூறப்படும் ஒரு பழங்கதையுடன் தொடர்புடையது. உறையூர் பண்டைய சோழர் தலைநகரமாக விளங்கியது. இக்கோயிலை கட்டியவர் நந்த சோழன் என்றும், அரசனின் மகளாக அவதரித்த மஹாலஷ்மி ரங்கநாதரை மணந்ததாகவும், அந்த வைபவத்தை கொண்டாடும் விதமாக அரசன் இக்கோயிலை கட்டியதாகவும் தலபுராணம் கூறுகிறது. கோயிலுள் நுழைந்தவுடன் காணப்படும் பெரிய மண்டபத்து தூண்களில் மிக அற்புதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆழ்வார்களுக்கும், வைணவ ஆச்சார்யர்களுக்கும் சன்னதிகள் உள்ளன. திருப்பாணாழ்வாருக்கு, தனியாக ஒரு சன்னதி திருக்குளத்தின் வடப்புறம் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான வாயில் வடக்கு (ஸ்ரீரங்கம்) நோக்கியுள்ளது.


பங்குனி மாத உத்சவத்தின் போது, ஸ்ரீரங்கத்திலிருந்து உத்சவ மூர்த்தியான நம்பெருமாள் (உறையூரில் மூலவர் மட்டுமே இருக்கிறார்) ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பங்குனி பூரத்தின் போது, கல்யாண உத்சவ வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. திருப்பாணாழ்வார் உத்சவம் கார்த்திகையில் நடைபெறுகிறது.

****************************

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, August 27, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 9 - No Gimmicks

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

**************************
1. நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம்

2. ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே

3. இமைப் பறவைகள் சிறகுகள் விரிக்கும்

4. ஆவாரம்பூவில் அது தேவாரம் பாட, இங்கே நான் காத்திருக்க

5. மரக்கிளையில் ஒரு குருவி கூடு கட்டி வாழ்ந்ததே

6. கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால்

7. நெஞ்சுலே நெருப்பை வச்சா நீரும் அணைக்க முடியுமா

8. நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை

9. எல்லார்க்கும் தல மேலே எழுத்தொண்ணு உண்டு, என்னான்னு யார் சொல்லக் கூடும்

10. மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

11. கண்ணுக்கழகா பொண்ணு சிரிச்சா, பொண்ணு மனசை தொட்டு பறிச்சா...

12. இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில் இரவும் பௌர்ணமி ஆகும்
*******************************

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, August 26, 2006

Maran vs Yechury

தொலைத்தொடர்புத் துறையின் விரிவாக்கத் திட்டங்கள் தாமதப்படுவது தொடர்பாக, வியாழக்கிழமை அன்று, ராஜ்யசபையில், அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், CPI(M) தலைவர் சீதாராம் யெச்சூரிக்கும் பலத்த வாக்குவாதம் நடந்தது ! அப்போது மன்மோகன்சிங்கும் அவையில் இருந்தார்.

தனியார் சேவையை ஒப்பிட்டு, BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் உருப்படியில்லாத சேவை பற்றி பல உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின் போது கவன ஈர்ப்பு எடுத்து வந்த போது, யெச்சூரி, தனியார் நிறுவனங்கள் லாபம் அடைவதற்காக, BSNL/MTNL நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்கான டவர்கள் நிறுவும் பணி வேண்டுமென்றே (deliberately) நடைபெறாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார் !

துள்ளியெழுந்த அமைச்சர், அத்தகவல் தவறு என்றும், யெச்சூரியின் பேச்சு அரசுப் பணியாளர்களை சோர்வடையச் செய்யும் வகையில் உள்ளதாகவும் பதிலுரைத்தார் ! யெச்சூரி, தான் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்றும், தாங்கள் தான் தொலைத் தொடர்பு யூனியன்களை நடத்துவதாகவும், தான் கேட்டது, சில யூனியன்கள் தன்னிடம் முன் வைத்த புகாரை வைத்து தான் என்றும் கூறினார்.

திரு.மாறன் யெச்சூரி தான் கூறியதை எழுத்து வடிவில் (!) தர இயலுமா என்றும், தான் (மாறன்) பேசியதை யெச்சூரி காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் சூடாகப் பேசினார் என்று தெரிகிறது. கடுப்பான யெச்சூரி, கேள்வி நேரம் முழுவதும் தான் அவையில் இருந்து கவனித்ததாகவும், அமைச்சரின் இத்தகைய மரியாதைக் குறைவான போக்கு சரியில்லை என்றார் !! உடன் இருந்த பிருந்தா கரத், " என்ன இது ? அமைச்சர் ஏன் இப்படி கூச்சலிடுகிறார் ?" என்று கூறினார் !!!

இந்த ரகளைக்குப் பின் யூனியன்கள் யெச்சூரிக்கு அளித்த தகவல்களை, தனக்குத் தெரியப்படுத்தினால், தான் அவை குறித்து விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்று யெச்சூரிக்கு அமைச்சர் கடிதம் ஒன்று எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

சில மாதங்களுக்கு முன், டாடாவை (யே!) மிரட்டினார் என்று ஒரு பிரச்சினை ! இப்போது இது ! நல்ல வேளை, யெச்சூரியை 'ஒண்டிக்கு ஒண்டி' வருமாறு அழைக்காமல் விட்டாரே ;-) யெச்சூரி வைகோ அல்லர் ! CPI(M)யை ஓவராக வெறுப்பேற்றினால், மத்திய அரசு கவிழும் அபாயம் உள்ளது ! அதனால், தாத்தா வாங்கித் தந்த அமைச்சர் பதவியும் பறி போகும் ! அப்படி, மத்தியில் ஆட்சி கலைய திமுக அமைச்சர் ஒருவர் காரணமாகி விட்டால், கலைஞர் அரசுக்கும் ஆபத்து தானே ! இன்னொரு தேர்தல் (அதற்கான பெரும் செலவு!) தற்போது நிச்சயம் தேவையற்ற ஒன்று தானே !

என்றென்றும் அன்புடன்
பாலா

பல்லவியும் சரணமும் II - பதிவு 9


***********************
பல்லவியும் சரணமும் பதிவுக்காக, பழைய பாட்டுக்களுக்கான பல்லவிகளுக்காகவும் அவற்றுக்கான சரியான சரணங்களுக்காகவும் என் ஞாபகங்களை அலசிக் கொண்டிருந்தபோது, தூக்கக் கலக்கமாய் இருந்ததால், நல்ல பல்லவிகள் நினைவுக்கு வந்தாலும், சரணங்கள் சட்டென்று பிடிபடாம்ல போயின. நல்ல சரணங்கள் நினைவுக்கு வந்தும், அவற்றுக்கான பல்லவிகள் தொண்டையில் சிக்கிக் கொண்டன. "என்னடா வம்பாப் போச்சு" என்று அலுத்துக் கொண்டபோது, பளிச்சென்று நினைவில் தோன்றிய பல்லவியும் சரணமும், உங்கள் பார்வைக்கு ;-))
************************
இதோ அந்த பல்லவி !





இதோ சரணம் !

மயில்நட மிடுவாய் மலரடி சரணம்! சரணம் சரணம் சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்! ...

கோபப்பட மாட்டியள் எண்டு நினைக்கிறேன் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, August 24, 2006

கறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு !

கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய Dr.ராமதாஸ், வீரப்ப மொய்லி பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தும், இடஒதுக்கீட்டில் அவரது நிலைப்பாடு பிற்பட்டவருக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் அவர் தமிழ்நாட்டுக்கு இனி வருகை தரும்போது அவருக்கு எதிராக பாமக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் கூறினார். சிறிது காலத்திற்கு முன் கறுப்பு பெயிண்ட் பூசி கலாட்டா, இப்ப கறுப்புக்கொடி ! வீரப்ப மொய்லிக்கு கறுப்புக் கொடி காட்டினால், தமிழக காங்கிரஸ்காரர்கள் சும்மா இருப்பார்களா என்று பார்க்க வேண்டும் !

மேலும், வீரப்ப மொய்லி க்ரீமி லேயரை இடஒதுக்கீட்டிலிருந்து தள்ளி வைக்க முயன்றதாகவும், அன்னை சோனியாவின் தலையீட்டால் தான், க்ரீமி லேயரின் தலை தப்பியது என்ற தகவலையும் ஐயா அளித்தார். க்ரீமி லேயர் க்ரீமி லேயரை ஆதரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தானே !!! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இடஒதுக்கீட்டு விவாதத்தின்போது எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது, தமிழக மக்களுக்கு அவர் இழைத்த துரோகம் என்று ராமதாஸ் கூறினார். ஐயா ஏதோ முடிவில தான் இருக்கார் போல இருக்கு ! ஒரு கூட்டணிக் கட்சியின் அமைச்சராகிய சிதம்பரத்திடம் இது குறித்து பேசித் தெளிவதற்கு முன், இவ்வாறு ராமதாஸ் பேசியிருக்க வேண்டாம் எனத் தோன்றுகிறது.

அடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தமாக ஒரு வெடி வைத்தார் ! பா.ம.கவைத் தவிர, மற்ற கட்சிகள் 'கூட்டணி தர்மத்தை' கடைபிடிக்காததால் தான், பாமக கிட்டத்தட்ட 13 இடங்களில் தேர்தலில் தோற்றது என்றும், முக்கியமாக விருத்தாசலம் (கேப்டனை இனிமேல் யாரும் அங்கே அசைக்க முடியாது போலத் தெரிகிறது!) மற்றும் புவனகிரி ஆகிய பாமக கோட்டைகளில் தன் கட்சி தோற்றது என்றும் கூறினார். மேலும் திமுக வேட்பாளர்களான ஆதிசங்கரும், வெங்கடபதியும், பாமகவின் ஆதரவால், அவர்கள் வன்னியராக இல்லாத போதும் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகளில் வெற்றி பெற்றதாக (இதில் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை!!!) கூறினார்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விரிசலுக்கான ஆரம்ப அறிகுறிகள், இவ்வளவு சீக்கரமாகவா ??? மக்கள் வரிப்பணத்தை விரயம் பண்ணி இன்னொரு தேர்தல் தேவையா ? கஷ்டமோ, நஷ்டமோ, அட்ஜஸ்ட் பண்ணி கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையா இருந்தா நல்லது :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, August 23, 2006

மனதை பதற வைக்கும் ஒரு துயரம்

எவ்வளவு பேர் இது குறித்த செய்தியை வாசித்தீர்கள் என்று தெரியவில்லை ? சமீபத்தில் ராஜஸ்தானில் நிகழ்ந்த மழை வெள்ளப் பெருக்கில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் சிக்கித் தவித்து, உயிருக்குப் போராடி, பின்னர் ஒருவர் பின் ஒருவராக, கரையில் நின்றபடி ·பால்னா என்ற ஊரின் மொத்த மக்களும் அரசு இயந்திரமும் பார்த்துக் கொண்டிருக்க, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் ! தங்களை எப்படியாவது காப்பாற்றும்படி, அவர்கள் கதறியும், வெள்ளத்தின் வேகத்தைக் கண்டு அஞ்சி, ஒருவரும் முன் வரவில்லை. வேடிக்கை பார்த்தவர்களில், ராஜஸ்தான் அமைச்சர் லஷ்மி நாராயண் தேவும் ஒருவர் !

அவ்வழியாக சென்று கொண்டிருந்த இரு இந்திய ராணுவ வீரர்கள் தைரியமாக வெள்ளத்தில் குதித்து அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஒரு வீரர் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். இன்னொருவர் தண்ணீர் வடிந்த பின் மீட்கப்பட்டதாக தெரிகிறது. மேலே சொன்ன ஐவர், ஒரு பாலத்தை கடப்பதற்காக, காரில் சென்றபோது, காரி நதியின் வெள்ளப்பெருக்கில் சிக்கினர் என்று தெரிகிறது. கார் பாலத்தின் மேல் சென்றபோது, சில நொடிகளில், மூழ்கி விட்டது. காரின் மேல் கூரையில் ஏறிய ஐவரும் உதவிக்காக கூக்குரலிட்டனர். ஒரு மணி நேரத்தில் வந்த போலீசார், மீட்பதற்கு வேண்டிய உபகரணங்கள் எதையும் எடுத்து வரவில்லை என்பது பெரிய கொடுமை. அரசு அதிகாரிகளும் அவ்விடத்திற்கு வந்து, என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தனர். வெள்ளப்பெருக்கின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், நீரில் குதிப்பதற்கு யாருக்கும் தைரியம் வரவில்லை.

மக்களில் சிலர் சிக்கியிருந்தவரை நோக்கி கயிற்றை வீசினர். நதியின் அகலம் கிட்டத்தட்ட 200 அடி இருந்ததால், அதுவும் பயனில்லாமல் போயிற்று. வெள்ள நீரின் மட்டம் உயர உயர, அந்த ஐவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தபடி, கரையில் இருந்த மக்களை காப்பாற்றும்படி கெஞ்சினர். மக்களில் சிலர், பல பிளாஸ்டிக் குழாய்களை ஒன்றாக இணைத்து அவர்களை மீட்க எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. படை சூழ வந்த அமைச்சரும் கையை பிசைந்தபடி இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தி சாயும் நேரம், ஐவரில் ஒரு வாலிபர் தடுமாறி நீரில் விழுந்து மறைந்தார். மகனை மீட்க அவன் பின்னே குதித்த அவனது தந்தையும் மூழ்கினார். மற்ற மூவரும், மனதை உருக்கும் கூப்பாடுகளுக்கிடையில், ஒருவர் பின் ஒருவராக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர் ! இறை தரிசனத்துக்காக பயணப்பட்டவர்களை, எமன் கூட்டிச் சென்றது என்ன ஒரு அநியாயம் பாருங்கள் !

ராஜஸ்தான் அரசின் தலைமைச் செயலாளர், விமானப்படையை தொடர்பு கொண்டு, ஹெலிகாப்டரை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. மேக மூட்டத்தினால், ஹெலிகாப்டர் வருவது தடைபட்டு விட்டதாம். ஜோத்பூரிலிருந்து ஒரு ராணுவ அணி அனுப்பப்பட்டதாகவும், அதுவும், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சம்பவ இடத்திற்கு வர இயலாமற் போனதாகவும் தெரிகிறது.

இவையெல்லாம் வெறும் சப்பைக்கட்டாகவே தோன்றுகிறது. இதே ஒரு அரசியல்வாதியோ அவரின் நெருங்கிய உறவினரோ இவ்வாறு சிக்கிக் கொண்டிருந்தால், அரசு காப்பாற்ற பெரு முயற்சி எடுத்திருக்கும். எட்டு மணி நேரத்தில், எதுவும் செய்ய இயலவில்லை என்பதை அவ்வளவு எளிதாக ஒப்புக் கொள்ள முடியவில்லை ! என்ன தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு என்ன பயன் ? 480 நிமிடங்கள் இருந்தும், ஐந்து உயிர்களை காப்பாற்ற ஒரு இழவும் செய்ய இயலா ஒரு சூழலில் !!!


என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, August 22, 2006

+/- குத்து, பின்னூட்டம், பதிவுத்தலைப்பு - Jolly Tips

************************
தமிழ்மணம் '+/-' ரேட்டிங் வசதியை வழங்கியது, பதிவர்கள் வாசிக்கத்தக்க பதிவுகளை பரிந்துரைப்பதற்காக என்பது என் எண்ணம். ஆனால், அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது ? தங்களுக்கு ஒவ்வாத கருத்துக்கள் உடைய பதிவுகளுக்கு '-' போட்டு, அப்பதிவுகள் பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் பட்டியலில் வராமல் பார்த்துக் கொள்வதில் போய் முடிகிறது !!! பதிவரின் கருத்துக்கள் விவாதத்திற்குரியவை என்றால், தங்களது எதிர்கருத்துக்களை பின்னூட்டமாக இடலாமே ! ஜனநாயகத்தில் விவாதம் அவசியமானது இல்லையா ? அதை விடுத்து "-" போட்டுத் தாக்குவது சரியில்லை.

தனிமனிதத் தாக்குதல் / வசைகள் / அருவருக்கத்தக்க கருத்துக்கள் கொண்ட பதிவுகளுக்கு, வாசகர் கண்டிப்பாக '-' இட்டு, கண்டனத்தை தெரிவித்தால் நல்லது. அத்தகைய பதிவுகளை பின்னுட்டமிடாமல் நிராகரித்தாலே போதும். பதிவர் புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன் ! ஊக்கமளிப்பதால் தான் பிரச்சினைகள் பூதாகரமாகின்றன.

புதிதாக வரும் பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களைஊக்குவிக்கலாம். அவர்கள் மேலும் சிறப்பாக எழுத அது உதவும்.

சீரியஸ் மேட்டர் முடிந்தது, இப்ப கொஞ்சம் ஜாலியா சில கருத்துக்கள் :)

1. ஒரு பதிவை படிச்சுட்டு, ஒண்ணுமே தோணலன்னா, பதிவை மறுபடியும் வாசியுங்கள், ஏதாவது உள்குத்து இருந்தா புரிய வாய்ப்பிருக்கு ! பதிவின் தலைப்பை நன்றாக உள்வாங்கிக் கொள்ளுங்கள் ! அப்படியும் புரியலன்னா, நீங்க ஒரு வெண்குழல் விளக்கு தான் :) அல்லது வலைப்பதிவுலகம் பற்றி சரியா இன்னும் தெளியலேன்னு அர்த்தம் ! தெரிந்தோ தெரியாமலோ, சக வலைப்பதிவர் ஏதாவது சொல்லி ஏடாகூடமாக மாட்டினார்னா, உடனே அவரை "இது நியாயமா, தர்மமா, அடுக்குமா?" என்று கேள்வி கேட்டு ஒரு பதிவு போடுங்கள் ! உடனே, பதிவைச் சுத்தி கூட்டம் அம்மும் :) இது தான், இப்ப லேட்டஸ்ட் டிரெண்ட் ;-)

2. உங்களோட கூட்டாளியோட பதிவாயிருந்தால், "சூப்பர் மாமூ" அல்லது "கலக்கிட்டியே சந்துரு" என்று போட்டு கீழே "நமீதா ரசிகர் மன்றம்" அல்லது "சிம்ரன் ஆப்பக்கடை, துபாய்" (பதிவுக்கு சம்பந்தமா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை!) என்று குறிப்பிடுங்கள்.அலம்பல் செய்வதற்கென்றே அலைந்து கொண்டிருக்கும் அனானிக் கூட்டம் will take over :) "நீ உருப்பட மாட்டே", "நீ மட்டும் உருப்படுவியா?", "நான் உருப்பட்டாலும், நீ உருப்படவே மாட்டே", என்று பலவிதமான பெயர்களில் (தலையெழுத்துப் பிழை, சனீஸ்வர குய்ராலா, நாதாரி, கபோதி, சொர்ணமால்யா, புலிகேசி ....) அனானிகள் தொடர்ந்து பின்னூட்டி, உங்கள் பதிவு, "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் டாப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்வர் ;-)

3. பதிவின் தலைப்பில், வள்வள், கழிவு, கேவலம், ஜொள்ளு, கருப்பு, பாப்பான், போலி, டோண்டு போன்ற சொற்கள் இருந்தா, வாசகரை சும்மா காந்தம் மாதிரி பதிவு பக்கம் இழுக்கலாம் ;-) நெறய பின்னூட்டங்களும் கிடைக்கும், பிளாக் கவுண்டர் (Blog counter) வச்சிருந்தா பிச்சுக்கிட்டு ஓடும்
!!!

4. பின்னூட்டக் கயமைத்தனம் நெறய செய்யுங்கள் : அதான், 'நன்றி', 'மறுபடியும் நன்றி', 'ஆ, சொல்ல மறந்துருச்சு', 'வாங்க, வாங்க' போன்றவை !!! ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் தனித்தனியா (டைம் கேப் விட்டு) நன்றி சொல்லுங்க ! அதே மாதிரி, டைம் கேப் விட்டு, உங்களுக்கு வந்த பின்னூட்டங்களை ஒவ்வொண்ணா பப்ளிஷ் பண்ணனும், புரியுதா ??? அப்ப தான், மறுமொழியப்பட்ட ஆக்கங்கள் பகுதியை நீங்க ஆதிக்கம் பண்ணலாம் ;-)

5. நடுநிலையோடு ஒரு பிரச்சினையின் இரு பக்கங்களையும் ஆய்ந்து, மறந்தும் கூட ஒரு பதிவு போட்டு விடாதீர்கள். அதே போல், எதிராளி சொல்வதில் ஏதாவது சங்கதி உள்ளதா என்றெல்லாம் பார்த்து டைம் வேஸ்ட் செய்யாதீங்க ! Chances are, உங்களை யாரும் சீந்த மாட்டார்கள் !!! ஒரு பக்கத்தை பிடித்துக் கொண்டு தொங்குவது தான் உங்களுக்கு celebrity status தரும் ;-)

6. மேலே சொன்னவை எதுவும் (அதிக பின்னூட்டங்கள் பெற!) வொர்க் அவுட் ஆகலேன்னா, நேரா டோண்டுவின் ஏதாவது ஒரு பதிவுக்குப் போய் 'நல்ல பதிவு' ன்னு மட்டும் கமெண்ட் போடுங்க, அவ்வளவு தான், நீங்களே நினைச்சு பார்க்காத அளவுக்கு, டோண்டுவின் 'நெருங்கிய நண்பர்' உங்களுடைய எல்லா பதிவுகளிலும், பின்னூட்ட மழை பொழிவார் ;-) வாழ்த்தி, நெறய தனிமடல்களும் அனுப்புவார் :)

இந்த பதிவுக்கு, + அல்லது -, ஏதோ ஒண்ணு குத்துங்க, ஒங்க இஷ்டப்படி :)
என்ன, ஜோதியிலே ஐக்கியமாகத் தான் இந்த பதிவே :)

என்றென்றும் அன்புடன்
பாலா
***********************************

Monday, August 21, 2006

இடஒதுக்கீடு அமல் - 2

பார்க்க:
"இடஒதுக்கீடு அமுல் - வீரப்ப மொய்லி"

********************
சிறிது நேரத்திற்கு முன் இடஒதுக்கீடு குறித்து ND TV-யில் Flash செய்திகள் பார்த்தேன். அதை பகிர்ந்து கொள்கிறேன்.

*********************
1. 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சர் குழு (Cabinet) ஒப்புதல் அளித்துள்ளது

2. வீரப்ப மொய்லி CNN-IBN பேட்டியில் கூறியது போல, இடஒதுக்கீடு பல கட்டங்களில் (in phases) நிறைவேற்றப்படுகிறது

3. க்ரீமி லேயர் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது

4. முதல் கட்டத்தில் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் மட்டுமே, இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.

5. ஆகஸ்டு 25ஆம் தேதி, இடஒதுக்கீட்டிற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

********************

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails